GRABBING THE GOOGLE GEN FROM GEHENNA MISSION news | the writings of duke jeyaraj

Crisp Write-Ups That Wrap Bible Truth On Hot Topics / Cricket-Wrapped Bible Messages / Practical Bible Teaching On Victory-Over-Porn / Antidotes Against Modern False Teachings / Ministry News of G4 Mission

The Writings of Duke Jeyaraj. Ministry News from the organisation he founded with his wife, Evangelin Duke, the Grabbing the Google Generation from Gehenna Mission.

மின்வலை மீன்கள்

Dr. டியூக் ஜெயராஜ்


மின்வலை: இணையம் (Internet).  இன்றைய உலகமே அதில் தான். இளைஞரின் சிந்தையை இறுகிப் பற்றி விட்டது. நாம் இன்றைக்கு ‘இணைய இளைஞர்’ தலைமுறையில் வாழ்கிறோம். கிறிஸ்துவைப்  பின்பற்றும் இளைஞராகிய நாம் இந்நிலையை எப்படி எதிர்கொள்கிறோம்? இக்காரியத்தைக் கண்டுகொள்ளாது ஒதுக்கி விடுகிறோமா? அல்லது, பித்துப்  பிடித்தது போல இதில் பிடிபட்டு விட்டோமா? பதில் யோசிக்கும் முன்,  இன்னொரு கேள்வி. இந்த ‘மின்வலை’ பற்றி வேதம் என்ன சொல்கிறது? “ அது மீன் வலையைப் பற்றித்தானே பேசியுள்ளது?” எனத் தலையைப்
பிய்த்துக் கொள்கிறீர்களா?! என் கட்டுரை இக்குழப்பம் பற்றியதுதான்.
 
1)       ஆர்ப்பாட்டமான விதத்தில் நம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது இணையம்

 பத்து வருடங்களுக்கு முன்,  யாராவது ‘Mouse’ என்று சொன்னவுடன் எலியின் நாற்றம் எண்ணத்தில் நெடியடிக்கும். இப்போது அப்படி இல்லை. ‘Mouse’ என்றவுடன் கம்ப்யூட்டருக்குள் பயணம் செய்ய உதவும் கையடக்கக் கருவிதான் நினைவுக்கு வருகிறது.

   என் தலைமுறை இளைஞர் பற்பல இணைய முகவரி வைத்துக் கொண்டுள்ளனர். இணையர் தொடர்பு என்பது கைக்கடிகாரம் வைத்திருப்பது போல சாதாரணமாகி விட்டது. நத்தை வேகத்தில் நகரும் தாள்க் கடிதங்களை விட,  வித்தை வேகத்தில் விரையும் மின் கடிதங்களையே  இன்றைய வாலிபர் விரும்புவதில் வியப்பென்ன? ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நண்பருக்கும் விரல் தட்டும் அதே நொடியில் செய்தி சென்று சேருகிறதே..  இதைவிட என்ன வேண்டும்?  இணையத் தொடர்புடைய இந்தியர் பெரும்பான்மையினராவது – கைகளில் காணும் செல்போன்களைகன கணக்கிட்டால் – வெகு தொலைவில் இல்லை. இணையத்தின் செயல்பாடு வியப்பளிக்கிறது. இணையதளத்தில் நீங்கள் போட்டு வைத்த செய்திகளை, வாஷிங்டனில் இருந்து வந்தவாசி வரை,  டோக்கியோவில் இருந்து டொம்புச்சேரி வரை, யாராயினும் ஒரேயொரு க்ளிக்கில் பார்த்துவிடலாம்.
 
2)       ஆழமாய்,  அளவில்லா தகவல்களை நமக்குத் தருகிறது இணையம்

 ‘நற்செய்தி யாதோரின் இறுதி முடிவு’ என்பதுதான் வேதாகமகக் கல்லூரியில் என் ஆராய்ச்சியின் தலைப்பு. நான் எப்படி ஆராய்ச்சி செய்தேன்,  தெரியுமா? இத்தலைப்பில் வேதத்தை ஆராய்ந்த பின்,  மின் வலையில் என் விரல் வைத்தேன். www.google.com என்ற தேடும் களத் திற்குப் போனேன். ‘Unevangelised’ என்ற எழுத்துக்களைத் தட்டச்சினேன். அவ்வளவுதான்!…  ஒரு நொடியில்,  தொகுப்பு தொகுப்பாய்,  வேதாகமகக்  கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கருத்துக்களையுடைய பல கிறிஸ்தவத்தலைவர்களின் கட்டுரைகள் என் கண்முன் பட்டியலாய்  விரிந்தன. முதன் முதல் அனுபவம். முற்றுமாய் நம்ப இயலவில்லை. நம்ப முடியா அதிசயம் அது. எவரோ ஒருவர் எல்லாக் கிறிஸ்தவ நூலகங்களுள்ளும் நுழைந்து, ‘நற்செய்தி யாதோரை’ப் பற்றிய அனைத்துப் புத்தகங்களின் கருத்தையும் ஒன்று திரட்டி என் கையில் கொடுத்தது போல உணர்ந்தேன். என்ன அதிசயம்!…

   இணையத்தின் வருகையால்,  அலமாரி நிறையப் புத்தகங்களை அடுக்கி வைக்கும் அவசியம் ‘சிக்ஸர்’ பந்தென சிட்டாய் பறந்து விட்டது. ஆனால் எந்த இணையத்தளத்திலிருந்து அல்லது எந்த ஆசிரியரின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரமின்றி எத்தகவலையும் உங்கள் படைப்புகளில் இணைத்து விடுதல் கூடாது. குறிப்பாக, அஸைன்மென்ட் (ஆராய்ச்சிப் படைப்பு) சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தருணத்தில் இச்சோதனை தாக்கும். இதில் தவறினால் அது பாவமின்றி  வேறொன்றுமில்லை. ‘எரேமியா’ நூலில், ஒருவரின் செய்தியை மற்றவர் திருடி ‘கடவுளே எனக்குத் தந்தார்’ எனக்கூறி உலகுக்கு அறிவித்த இறைவாக்கினைப்பற்றி எரிச்சலுற்ற கடவுளை அறிவோமே! (எரே 23:30, 31).
 
3)       அழகாய் நமக்கு நற்செய்தி வாய்ப்பளிக்கிறது,  இணையம்

 இணைய அரட்டை(Internet Chatting) இன்றைய இளம் இதயங்களை இறுகப் பற்றிக் கொண்டது. உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு செய்திக்கும், கேள்விக்கும் உடனடியாய்ப் பதில் அளிக்கும் வசதியை இணையம் பல்லாயிரம் மைல்கள் தள்ளி வாழும் நண்பர்க்கும், நாம் அறியாதோர்க்கும் அளித்துள்ளது.  உன் வாழ்வை உருமாற்றிய அந்த ஒருவரை-இயேசுவைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்க எத்தனை அற்புதமான வாய்ப்பு இது! இயேசுவின் வார்த்தை இளைஞர்க்குரியது; எடுத்துரைக்கத் தயங்காதே! இயேசு நமக்காகக் கல்வாரி வரையிலும் சிலுவையையே சுமக்கக் கூடுமானால், அவருக்காக நாம் கம்ப்யூட்டர் வரை சென்று இந்த ‘மவுஸை’த் தொடமுடியாதா? நற்செய்தியின் இன்றைய வடிவங்களை வசமாக்கி,  இணையப் பிரியர் எண்ணற்றோர்க்கு ஒரே ‘க்ளிக்’கில் அனுப்புங்கள். நான் செய்தது தான்.பவுல் இன்று வாழ்வாரானால் நிச்சயமாய் இணையம் அவருக்கு இனிய கருவியாகியிருக்கும்.காரணம்,  அவரே சொன்னாரே ‘எப்படியேனும் ஒரு சிலரையாவது மீட்க,  எல்லார்க்கும் எல்லாம் ஆனேன்’(1 கொரி 9:22).  இந்த மனபாங்கே நமக்குத் தேவையான எல்லாமும்!

   முன் பின் அறியாதவரோடு ‘இணைய அரட்டை’ யடிக்கையில் கவனமாய் இருங்கள். சில நங்கையர் முகம் தெரியாத ‘இணைய அரட்டை’ நண்பரோடு காதலில் – உண்மையாய், உறுதியாய், உத்மத்தம் பிடித்தாற் போல – விழுந்து விடுவர்; பின்புதான் தெரிய வரும், இவர்களின் இதயம் கவர்ந்தவன் 80 வயது இளம் ரோமியோ என்று! இப்படிப்பட்ட மன முறிவைக் கொணர்வது,  மடமையன்றி வேறென்ன? ‘கடவுளற்ற அரட்டைகளில்’ சிக்கிக் கொள்ள வேண்டாம். இருமுறை பவுல் இதுகுறித்து இளம் தீமோத்தேயுவை எச்சரித்துள்ளார் – 1 தீமோ 6:20/ 2 தீமோ 2:16
 
4)       அருவருப்பாய் இளைஞரின் ஒழுங்குணர்வைச் சீரழிக்கிறது,  இணையம்
 
விசுவாசிகள் உள்ளிட்ட அநேக இளைஞரை இணையம் தனது Pornography (காமத்தைத் தூண்டும் படங்கள்) வலையில் சிக்க வைத்துவிட்டது. அநேகத்  தளங்களில், அருவருப்பான படங்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.

   விஷ வலைகளை உதறி உடனே வெளியேறு. நிர்வாணம் ஒரு பிரச்சனையே இல்லை என்பாயானால், கடவுள் மனிதர்க்கு ஆடை அளிக்க வேண்டிய அவசியம் யாது என யோசித்துப் பார்(ஆதி 3:21).  தென் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட இனப் பெண்கள் சரியான மேலாடையின்றி இருந்ததைக் கண்ட ஆங்கிலேய மிஷனரிகள்,  ஒரு சமூகப் புரட்சியே  ஆரம்பித்து அந்த அநாகரீகத்தை அநேக ஆண்டுகட்கு முன்னர் முடிவுக்குக்  கொணர்ந்தனர். அவர்களுக்குத் தலை வணங்குகிறேன்.இத்தகைய அசிங்கத்  தளத்திற்குள் செல்லும் வேளையில் கடவுளின் வார்த்தையை மீறுவது மட்டுமன்றி உனக்கே அதிக தீங்கிழைத்துக் கொள்கிறாய். மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாகவே பெண்களை மரியாதையோடு உறவாட வேண்டிய இணைப்படைப்புக்களாய் எண்ணாமல், இன்பம் தரும் இயந்திரங்களாகவே நடத்த ஆரம்பித்து விடுவாய்.கடவுளின் திட்டப்படி,  திருமணத்திற்குப் பிறகு நீ பெறவேண்டிய பரவச உணர்வை எல்லாம் இந்த அருவருப்புத் தளங்கள் அழித்துவிடும்(நீதி 5:18-19).

   அதுமட்டுமல்ல, இப்பழக்கத்தால் இத்தளங்களின் தயாரிப்பில் ஈடுபடும் தரங்கெட்டோரின் பேராசைகளுக்கும் தீனி போடுகிறீர்கள். “இப்பழக்கத்தினால் எனக்குள் ஊடுருவியுள்ள வெட்கமும், குற்றவுணர்வும் என் உணர்வுகளைக் கொன்று விட்டன. தனிமையில், எல்லாராலும் தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட உணர்வோடு போராடிக் காயமுற்றேன். என்னைக்  கொல்லும் வலி அது. நான் எல்லாம் இழந்து இப்படி நிற்க, இத்தளத்  தயாரிப்பாளர்கள் கோடிகோடியாய்ச் சம்பாதிப்பது கண்டு என் உள்ளம் கோபத்தில் கொதிக்கிறது” என்ற இத்தகையத் தளத்தின் அடிமையாகிப் போன ஒரு இதயத்தின் உண்மைக் குமுறல் இது.

   “கொஞ்சம் பார்ப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது” என்பதுவே பிசாசு சொல்லும் பெரிய பொய்யாய் இருக்கும். “கொஞ்சம்” போதாது என்று சீக்கிரமே உணர்ந்திடுவாய். நேற்றைக்குப் போதுமானது என்று எண்ணிய காட்சியை இன்றைக்குப் “போரடிக்கிறது” என்று ஆகிவிடும். இன்னும் இன்னும் என்று இறுதியே இல்லாமல் இறங்கி விடுவாய். “எதைத்தேடி பாவத்திற்குள் இறங்குகிறாயோ அதை இறுதி வரைக் கண்டுபிடிக்கவே மாட்டாய்” என்று நேர்த்தியாய் ஒருவர் சொன்னார்.

   இந்த அருவருப்பின்பால் உனக்கு இருக்கும் அடிமைத்தனத்தை ‘உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் இருந்தாலும் உறைந்த பனி போல வெண்மையாகும்’(ஏசா 1:18).  மின்வலைத் தொடர்புக்குப் போகும் போது ‘கடவுளின் தொடர்போடு’ செல். ‘கடவுளோடு தொடர்பா? எப்படி?’ என நீ வியக்கலாம். விவரிக்கிறேன்; தேவனின் வார்த்தைகள் அடங்கிய வேதப்  புத்தகமே, அவரோடு நம்மை இணைக்கும் இணைத்தளம். இணைய மையத்துக்குள் நான் நுழையும் போது என் வாயில் வரும் ஒரு வேதவசனம்: “தாவீதின் இச்செயலோ ஆண்டவருக்கு மன வருத்தம் அளித்தது”(2 சாமு 11:27).  “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்க மாட்டேன்”(சங் 101:3) என்ற தாவீதின்- பத்சேபாள் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவன் எழுதியது- வார்த்தைகளெல்லாம் உன் சபலங்களைச் சாம்பலாக்கும் சத்திய அக்கினி- இவைகளைச் சொல்லிப் பார். பிசாசு உன்னை எந்த மின் வலையிலும் சிக்க வைக்க முடியாது.

   இன்னும் இதில் வழுக்குவாய் எனில், உனது பலரில் ஒரு நண்பரைத் தேர்ந்தெடுத்து மனம் விட்டுப் பேசு. உணர்ச்சிவசப்படாது “சமீபத்தில் ஏதேனும் அந்தச் சாக்கடையைப் பார்த்தாயா?” என உன்னைக் கேட்கும் உரிமையை அவருக்குக் கொடு. இரகசியமெனும் இருள் தான் இத்தகைய பாவங்களின் செழிப்பு நிலம். ‘இத்தளங்களை நீ பார்ப்பது யாருக்குத் தெரியும்?’ என சாத்தான் உன்னைத் தைரியப்படுத்துவான். அது பச்சைப் பொய்.தேவன் அறிவாரே! ‘அவரது கண்ணுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும் திறந்தவையாகவும் உள்ளன’ (எபி 4:13) என்றன்றோ  இறைவாக்கு உரைக்கிறது!
 
5)      அற்புதமாய்ப்  பயன்பட,  சுயக்கட்டுப்பாட்டை வேண்டுகிறது,   இணையம்

 எதிலும், அதிகம் என்பது ஆபத்தானதே, எவ்வளவு இனிமையாய்த்  தோன்றிடினும்! கடவுளுக்குப் பயப்படுபவன் இவைகள் (இப்படிப்பட்ட ‘மிகை’கள்) எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான் (7:8) என்று பிரசங்கி சொல்கிறான்.

  மணிக்கணக்காய் இணையத்தில் திளைத்த பின்னும், நாட்டிற்காகப் பரிந்து பேசும் சில கணங்களுக்குப் பின்னர் கிடைக்கும் நிறைவு, கிடைக்காமல் போவது விநோதமாக இல்லையா! மின்வலை நமக்கு வரமே; ஆனால், வரைவின்றி அறிவின்றி திளைத்தால் அதுவே சாபமாகும். பொதுவாக,  இணையம் நமக்கு அனுகூலமே. போதையாகிப் போனால், அதுவே நமக்கு அலங்கோலமும் ஆகும். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம். மட்டாய்ப் பயன்படுத்தினால், கடவுளுக்கேற்ற கருவி ஆகும். ‘அளவோடு நில்’ இதுவே உன் இணைய நேர இலட்சிய வார்த்தை ஆகட்டும். கேள்வி எளியது தான்; “வலையிருப்பது உன் கையிலா ? அல்லது , நீயிருப்பது வலைக்குள்ளா?” இந்த மின்வலை உலகிலும் , பவுலோடு இணைந்து நாம் சொல்ல வேண்டும் ; “எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எதற்கும் நான் அடிமையாக மாட்டேன் ” (‘கொரி 6:12 ) முட்டுகிற மாட்டைக் கட்டி வைக்க வேண்டும் என்பது மோசேக்குக் கடவுள் கொடுத்த 613 விதிகளில் ஒன்று ( யாத் . 21:36 ). இதனை ஆவிக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொண்டால் , பாவச்சிந்தனைகளும் , இச்சையிழுப்புகளும் நிறைந்த நமக்கே நாம் காவலிட்டுக் கொள்ளும் அவசியம் என உணரலாம் .

   மவுஸைத் தொடும் முன்னர் மனதுக்குள் கொண்டு வர வேண்டிய சில கட்டுப்பாடுகள் என்ன ? மின் – அஞ்சல் பார்ப்பதைக் குறைத்துக் கொள் . அவ்வப்போது பார்த்துதான் ஆக வேண்டும் என்ற பதட்டத்துக்கு விட்டுக் கொடுக்காதே . முழுவதும்  மூடப்பட்ட, இருளான இரகசிய இணைய மையங்களுக்குப் ( Internet Centre ) போவதை விடச் சற்று வெளிப்படையாயிருக்கிற – அத்தனை இரகசியமாயில்லாத மையங்களுக்குச் செல்வதைப் பழக்கப்படுத்திக் கொள்.இதனால், அசிங்கத் தளங்களைப் பார்க்கும் ஆர்வம் மெள்ள மெள்ளச் செத்துப் போகும் . எதைப்பார்க்க வேண்டுமென்று நன்றாய்த் திட்டமிட்டு , அதன் பின்னரே இணைய மையத்தில் கால் வை . சிறிய குறிப்பேட்டில் நீ பார்க்க அவசியமான தளங்களின் பெயர்களைக் குறித்து வைத்துக் கொள் அதைத்தவிர வேறெங்கும் அலையாதே. “பாதையைத் தேர்ந்தெடுத்து , பத்திரமாயப் பயணம் செய்.வழி விலகாதே ; தீமையைப் பின்பற்றாது உன் கால்களைக் காத்துக் கொள் ” என்பதே நீதிமொழியாளன் நமக்குத் தரும் நற்சிந்தனை . நோக்கமின்றி மின் வலைக்குள் சஞ்சரிப்பதுவே , விலக்கப்பட்டவைகளை விரும்பித் தேடும் செயலுக்கு அருகில் வந்து விட்டதற்கான அபாய அடையாளமே .

“இளைஞனே உன் இளமையிலே மகிழ்ச்சியாய் இரு ; உன் வாலிப நாட்களில் உன் இதயம் மகிழட்டும் ; உன் மனமும் கண்களும் போன வழியே நட . ஆனால் இந்த எல்லாக் காரியத்திலும் கனக்குச் சொல்லக் கடவுள் உன்னை நீதியாசனத்தின் முன் நிறுத்துவாரென்பதை மறவாதே”(பிர .11 : 9 ) என்ற பிரசங்கியின் புகழ் பெற்ற வார்த்தைகள் , இந்த ‘இடுக்கமான பாதையில் இயேசுவோடு இளைஞர்’ கட்டுரைக்குச் சரியான முத்தாய்ப்பு . இன்னும் சுருக்கமாய்: “இணையத்துக்கு இயேசுவோடு செல். அவர் செல்லும் வரை நீயும் செல் . அவர் நிற்கும் கணத்தில் நீயும் நின்று விடு”
 
 
 
Rev.Dr.டியூக் ஜெயராஜ், இக்கட்டுரையின் ஆசிரியர் – பயிற்சி பெற்ற வேளாண்மை பொறியாளர்(B.Tech from SHIATS, Allahabad,India) ஆவார். தன் படிப்பிற்கேற்ற வேலையைத் தொடராவிடினும், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது வீட்டு பால்கனியில் சிறு செடிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்திருக்க கூடும். ஆனால் அதைவிட இக்கால தலைமுறையினருக்கு வேதத்தின் உண்மைகளை கிரிக்கெட்-ன் சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் சமகால சம்பவங்கள் மூலம் எடுத்துரைப்பதையே தெரிந்து கொண்டார். ஆண்டவரின் அழைப்பு அவரை உந்தித்தள்ளியதால், அதற்குக் கீழ்ப்படிந்து, “Grabbing the Google Generation from Gehenna Mission (G4 Mission)” என்னும் ஊழியத்தை ஆரம்பித்தார். இதற்கு முன்பாக ஒரு சர்வதேச வங்கியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி/இளைஞர் போதகர்/வேதாகமக் கல்லூரி விரிவுரையாளர்/மிஷனரி/இளைஞர் பத்திரிகை ஆசிரியர் – இப்படி பல பணிகளை ஆற்றியவர். G4 Mission – ஒரு திருச்சபை அல்ல. மாறாக இது எல்லா கிறிஸ்தவப் பிரிவினருக்குமான ஊழியம் ஆகும். 2008ம் ஆண்டு முதல், இவ்வூழியத்தில் டியூக் முழுநேர போதகராக பணியாற்றி,தான் Southern  Asia Bible College, Bangalore-ல் இருந்து பெற்ற முறையான இறையியல் பயிற்சியை(M.Div & Doctor of Ministry) உபயோகப்படுத்துகிறார்.
Dale(16) & Datasha(12),  Duke யை தந்தை எனவும், Evangeline கணவராகவும் அழைக்கின்றனர். தன் குடும்பத்துடன் Hyderabad, India-வில் வசிக்கின்றார். டியூக் தனக்கு வரும் ஊழிய அழைப்புகளை ஏற்று, பல்வேறு நாடுகளில் ஊழியத்தை செய்துவருகிறார்(பங்களாதேஷ், சிங்கப்பூர், ஜெர்மனி, நேபால், ஐக்கிய அரபு நாடுகள்). இவைகளைக் கேட்டபின், உங்கள் ஆர்வம் தூண்டப்படுமாயின், நீங்கள் கீழ்காணும் இணையத்தள முகவரிகளை அணுகலாம். http://www.dukewords.com(இவரின் உரைகளை படிக்க), http://www.soundcloud.com/shoutaloud(ஆடியோ செய்திகளைக் கேட்க), http://www.youtube.com/visitduke (வீடியோ-க்களுக்கு).
 
Duke’s தமிழ் வேதாகம வளங்களைக் காண-  http://www.facebook.com/duketamizh

Note: This article was written in 1998, when people used to go Internet Cafes to use the internet.

Leave a Reply

Author

dukewords Avatar

Written by

Categories

Discover more from GRABBING THE GOOGLE GEN FROM GEHENNA MISSION news | the writings of duke jeyaraj

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading